‘ஹாட்ரிக்’ கனவில் இந்தியா * இலங்கையுடன் மூன்றாவது மோதல்

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இதில் சாதித்து இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கை சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா 2–0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது.

மாற்றம் வருமா

கேப்டன் ஷிகர் தவானுடன் இணைந்து தரும் பிரித்வி ஷா (43, 13 ரன்) நன்றாக துவக்கம் தந்தாலும் பெரிய ஸ்கோராக மாற்ற தவறுகிறார். இதனால் ‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் அசத்தும் தேவ்தத் படிக்கல், ருதுராஜுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம

தனி ஒருவன் 

‘மிடில் ஆர்டரில்’ இஷான் கிஷான், சூர்யகுமார் சிறப்பாக செயல்படுகின்றனர். மணிஷ் பாண்டே மட்டும் சொதப்புகிறார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு அறிமுக வாய்ப்பு வருமா என இன்று தெரியும்.

பின் வரிசையில் 69 ரன் எடுத்து ‘தனி ஒருவனாக’ இந்தியாவை மீட்டெடுத்த ‘ஆல் ரவுண்டர்’ தீபக் சகார், இன்றும் ஜொலிக்க காத்திருக்கிறார்.

‘குல்சா’ ஓய்வா

பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், தீபக் சகார் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது பலம். சுழலில் குல்தீப் யாதவ் (48/2, 55/0), சகால் (52/2, 50/3) இரு போட்டியில் நம்பிக்கை தந்தனர். இருப்பினும் கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சகார் வரிசையில் காத்திருக்கின்றனர். மற்றபடி குர்னால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா இன்றும் பங்கேற்கலாம்.

அவிஷ்கா அபாரம்

இலங்கை அணியை பொறுத்தவரையில் அவிஷ்கா, அசலங்கா, பின் வரிசையில் கருணாரத்னே மட்டும் பேட்டிங்கில் உதவுகின்றனர். கேப்டன் ஷனாகா, மினோத், தனஞ்செயா டி சில்வா என ஒருவரும் இவர்களுக்கு கைகொடுக்காது ஏமாற்றமாக உள்ளது.

பவுலிங்கில் சுழல் வீரர் ஹசரங்கா, கடந்த போட்டியில் 3 விக்கெட் சாய்த்தார். மற்றபடி சந்தகன், ரஜிதா, சமீரா என வேறு யாரும் பெரியளவில் சாதிக்கவில்லை.

94

இன்றைய போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 94வது (162 போட்டி) வெற்றியை பதிவு செய்யலாம். ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில்  ஆஸ்திரேலியா (138ல் 92 வெற்றி, எதிர்–நியூசி.,), பாகிஸ்தான் (155ல் 92 வெற்றி, எதிர்–இலங்கை) அணிகள் உள்ளன.

Advertisement

நன்றி

Leave a Reply

%d bloggers like this: