யானைகளின் மாற்று வழித்தடமும் பறிபோகும் அபாயம்; குன்னூரில் என்ன நடக்கிறது?

அடர் வனத்தைக் கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டம், குன்னூர் சரிவு முதல் மேட்டுப்பாளையம் மலை அடிவாரம் வரை பல்வேறு வகையான காட்டுயிர்களின் புகலிடமாக இருந்து வருகிறது. இந்த அடர் வனத்தின் ஊடாக, மலைப்பாதையானது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே பல கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைக்கப்பட்டது.

Elephants

யானைகளின் முக்கியமான வாழிடமாக இருந்து வரும் இந்தப் பகுதிக்கு, கெத்தை – கால்லார் வழித்தடத்தைப் பயன்படுத்தும் யானைக் கூட்டங்கள் வறட்சிக் காலங்களிலும், பலா காய்க்கும் பருவங்களிலும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும். இங்கு வந்து குட்டிகளுடன் சில காலம் முகாமிட்டு திரும்பிச் செல்வது வழக்கம். அது மட்டுமல்லாது இதே வனத்தில் நிரந்தரமாக உலவும் சில யானைக் கூட்டங்களும் உண்டு.

இந்த மலைப்பாதை உருவாக்கப்பட்ட போது யானைகளின் பூர்வீக வலசைப்பாதைகள் சிதைக்கப்பட்டிருந்தாலும், கால மாற்றத்தில் அதற்கு ஏற்ப மாற்றாக அதே வனத்தில் புதிய வழித்தடத்தை உருவாக்கி அந்தக் குறிப்பிட்ட வழித்தடத்தை மட்டுமே பயன்படுத்தி மேட்டுப்பாளையம் மலை அடிவாரம் முதல் குன்னூர் மலை உச்சி வரை மனிதர்களுக்கு எவ்வித இடையூறின்றி யானைகள் பயன்படுத்தி வருவதை சமீபத்தில் ஆய்வாளர்கள் வெளிக்கொணர்ந்தனர்.

யானைகள் வழித்தட அழிப்பு விவகாரம்

இந்த நிலையில், யானைகளின் இந்தப் புதிய வழித்தடத்திற்கும் பாதகம் ஏற்படுத்தும் வகையில், தற்போது இந்த மலைப்பாதையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் யானைகள் வழக்கமாக பயன்படுத்தும் வழித்தடத்தை மறித்து தடுப்புச் சுவர்களை எழுப்பி தடைபோட்டு வருவதாக வன விலங்கு பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

யானைகள் வழித்தட அழிப்பு குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர் ஹரிஹரன், “இந்த ஏரியால இருக்கிற யானைகள் ரொம்ப சென்சிட்டிவ். மனிதர்கள்கிட்ட‌ ஆக்ரோஷமா நடந்துகிட்டதே கிடையாது. அதுமட்டும் இல்ல; கால்லார்ல இருந்து குன்னூர் ரண்ணிமேடு வரை நீர்நிலைகள் புல்வெளிகள் இருக்கும் நல்ல வளமான பகுதியில புதுசா ஒரு வழித்தடத்தை உருவாக்கி யானைகள் யூஸ் பண்ணிட்டு இருக்கு. இந்தப் புது வழித்தடத்தை பயன்படுத்தும் யானைகள் ஒருசில இடத்துல மெயின் ரோட்டை குறுக்க கடக்க வேண்டியிருக்கு. அதுவும் ஒரு சில விநாடிகளில் அதைக் கடந்துரும்.

யானைகள் வழித்தட அழிப்பு விவகாரம்

ஆனால், அது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டுல இருக்கிறதாச் சொல்லி அந்த இடங்கள்ல இப்போ புதுசா தடுப்பு சுவர் கட்டிட்டு இருக்காங்க. இதனால யானைகளோட மூவ்மென்ட் மொத்தமா ஸ்டாப் ஆகும்‌. பக்கத்துல இருக்கிற கிராமங்களுக்கு அந்த யானைகள் போறதுக்கு வழிவகை செய்யும். இது இன்னும் சிக்கல உண்டாக்கும். யானைகளுக்கு ஃபாரஸ்ட் நிலம், தனியார் பட்டா நிலம், ஐவேஸ் லேண்டுனு எந்த வித்தியாசமும் தெரியாதுல்ல. நாமதான் அதுங்க நடக்கவும் வாழவும் வழி கொடுக்கணும்” என்றார் ஆதங்கத்துடன்.

இந்த நிலையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று யானைகள் வழித்தடம் தொடர்பாக இந்த மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன், “குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்ட இடங்கள் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இந்தப் பகுதியில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்கு நிலையான இடம் விடப்படும் என நீலகிரி வன கோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Elephants

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், “நீலகிரி மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பு கலெக்டராக இருக்கும் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமையில் ஆய்வு மேற்கொண்டோம். யானைகள் பயன்படுத்தும் பகுதிகளில் சர்வே செய்து 4 மீட்டர் முதல், 8 மீட்டர் வரை யானைகளுக்கான வழித்தடமாக அறிவிக்கச் சொல்லியிருக்கிறோம். நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கு ஒப்புக்கொண்டார்கள். வனவிலங்கு நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்ற விதிமுறையையும் எடுத்துக் கூறியிருக்கிறோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: