தீவிரமாகும் பிளாஸ்டிக் தடை: `இந்தமுறை நல்ல மாற்றம் நடக்கும்!’ – அதிகாரிகள் சொல்வது சாத்தியமா? | TN government assures permanent plastic ban – gives strict warning on its usage

இந்த அறிவிப்புகளின் பின்னணியில், உண்மையிலேயே மண்வளத்தின் மீதும் மக்கள் நலத்தின் மீதும் உள்ள அக்கறை மட்டுமே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஏற்கெனவே தடை உத்தரவில் இருக்கிற பிளாஸ்டி பொருள்களுக்கு மறுபடியும் எதற்காக இன்னொரு தடை உத்தரவு? 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணை மலடாக்கும் என்பதுத் தெரிந்த பிறகு, அதற்கு இன்னும் ஒருமாத கால அவகாசம் கொடுத்தது ஏன்? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்பவர்களை விட்டுவிட்டு நீங்களும் பயன்படுத்துபவர்களுக்குத்தான் உரிமம் ரத்து, அபராதம் என தண்டனை வழங்குவீர்களா?

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, “தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பைப் பற்றி வலியுறுத்திக்கொண்டே இருப்போம். இது அரசியல்சார்ந்த விஷயம் கிடையாது. மக்களுடைய மனம்தான் மாற வேண்டும்‘’ என்று சொன்னார்.
“உற்பத்தி செய்பவர்களைத் தடுப்பதற்கு என்ன வழி வைத்திருக்கிறீர்கள்?” என்கிற நம்முடைய கேள்விக்கு, “உடனே எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், நல்ல மாற்றத்தைப் பார்ப்பீர்கள்’’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

சுற்றுச்சூழல் பற்றி அதிக அக்கறையுடன் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் இதுகுறித்து கேட்டபோது, “நாம பயன்படுத்துற பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணோட மண்ணா மட்குறதுக்கு 500 வருஷமாகும், 5,000 வருஷமாகும், 50,000 வருஷமாகும்னு ஒவ்வோர் ஆய்வறிக்கையும் ஒவ்வொருவிதமா சொல்லுது. இதைப்பத்தியெல்லாம் கவலையில்லாம இந்த திராவிடக் கட்சிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை குப்பை மேடாக்கிடுச்சு. ஆர்.கே. எழில் நகர்னு பேர். ஊரே குப்பை மேடா கிடக்கு. பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைங்கதான்.
ரத்தம் சேகரிக்கிற பிளாஸ்டிக் பேக், ஊசி போடுற சிரிஞ்சி மாதிரியான ரொம்ப அத்தியாவசியமான மருத்துவப் பொருள்களைத் தவிர, மத்த எல்லா பிளாஸ்டிக் பொருள்களுக்கும் உடனே தடை போடணும். அதை விட்டுட்டு, பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கணும்னு மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி வாய்ச்சவடால் அடிச்சிக்கிட்டிருக்கறதுல அர்த்தமே இல்ல. ஒரே ராத்திரியில பணம் செல்லாதுன்னு சொன்ன மாதிரி பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதுன்னு சொல்ல முடியாதா பிரதமரால?

நிஜத்துல ஒருபோதும் மத்திய அரசோ, மாநில அரசோ அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க. அப்பப்போ `தடை தடை’னு அறிவிச்சிகிட்டேதான் இருப்பாங்க காலத்துக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, அது ஒருவிதமான சிக்னல். அதாவது, `பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கிற முதலாளிகள், எங்களை வந்து சந்தியுங்க’ அப்படின்னு சொல்லாம சொல்றதுக்குத்தான் இந்த தடை உத்தரவெல்லாம்‘’ என்கிறார் வருத்தமும் கோபமுமாக.

இது உலகளாவிய பிரச்னை. நம்முடைய அடுத்தத் தலைமுறையின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்னை. இதுபோன்ற உயிராதாரமான விஷயங்களில் மட்டுமாவது, லஞ்ச நெஞ்சத்தை மறந்து, நல்ல நெஞ்சத்தோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
காத்திருப்போம்… எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!

நன்றி

Leave a Reply

%d bloggers like this: