அமமுக செய்தி தொடர்பாளர் கட்சியிலிருந்து விலகல்

தாம்பரம்: முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவை தனது கட்டுப்பாட்டில்  கொண்டுவர சசிகலா நினைத்தார். ஆனால்,  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்  ஆகியோர் முயற்சியால், சசிகலாவின் ஆசை நிறைவேறாமல் போனது. இந்நிலையில், ஊழல்  வழக்கில் கைதான அவர், பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில்  அடைக்கப்பட்டார். இதனையடுத்து,  டி.டி.வி.தினகரன் அதிமுகவில் இருந்த சசிகலா  ஆதரவாளர்கள் சிலரை வைத்து, மீண்டும் அக்கட்சியை மீட்க முயற்சித்தார்.  ஆனால் அது முடியாததால், டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்  என்ற கட்சியை தொடங்கி எம்எல்ஏவும் ஆனார். ஆனால் கட்சியின் போக்கு  சரியில்லாததால், அந்த கட்சியில் இருந்த முன்னாள் எம்எல்ஏக்கள் பலர்  அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறினர்.

 2019ம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது.  2021ம் ஆண்டு சட்டமன்ற  தேர்தலில் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால்,  அக்கட்சியில் 2ம் நிலை  தலைவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அக்கட்சி  நிர்வாகிகள் பெரும்பாலானோர் திமுகவில் இணைந்தனர்.  சசிகலா அதிமுகவை  மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்  இருப்பதால் அவர் அமமுகவை கண்டுகொள்ளவில்லை. இதனால் டி.டி.வி.தினகரனும்,  அமமுக சம்பந்தமாக எந்த ஒரு முடிவும் எடுக்காமல், கட்சி நிர்வாகிகளுடன்  எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

 இதனையடுத்து,   கடந்து சில நாட்களுக்கு முன்னர், மாநில அம்மா பேரவை இணை செயலாளரும்,  அமமுக செய்தி தொடர்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி தலைவருமான  தாம்பரம் நாராயணன், சசிகலாவுக்கு கடிதம்  எழுதினார். அதில், அமமுக  தலைமையில் இருந்து, எந்த ஒரு பதிலும் வராமல் இருப்பதால் ஏராளமானோர்  கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.இதே நிலை  நீடித்தால், கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அமமுக பற்றி  நிர்வாகிகளிடம் பேச வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து,  தாம்பரம் நாராயணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா, கடந்த 5ம்  தேதிக்கு பிறகு தொண்டர்களை நேரில் வந்து சந்திப்பேன் என உறுதி  அளித்திருந்தார். ஆனால் மீண்டும் அவர் எந்த ஒரு பதிலும் கூறவில்லை. இதனையடுத்து, கட்சி தலைமை மீது நம்பிக்கை இழந்ததாலும், கட்சி நிர்வாகிகளின்  கருத்துகளுக்கு கட்சித்தலைமை செவி சாய்க்காமல், மீண்டும் மவுனம்  காப்பதாலும், நம்பிய தொண்டர்களை கைவிட்டதாலும், கட்சியிலிருந்து விலகி  கொள்வதாக முடிவெடுத்த தாம்பரம் நாராயணன் தனது ராஜினாமா கடிதத்தை, நேற்று  கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். மேலும், அவர் விரைவில் ஏராளமான  தொண்டர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

%d bloggers like this: